நம் மனம் எதையாவது ஆழ்ந்த ஆர்வத்துடன் சிந்திக்கத் தொடங்கும் போது, அதை அடைய நாம் மேற்கொள்ளும் தொடர்ச்சியான செயல்களே “விடாமுயற்சி” எனப்படும். ஒரு குறிக்கோளை நோக்கி முழுமனதுடன் பயணிப்பது சாதாரண முயற்சியல்ல; அது தளராத உறுதியின் வெளிப்பாடு ஆகும்.
உதாரணமாக, ஒரு போட்டித் தேர்வில் மிகவும் குறைந்த அளவிலேயே வேலை வாய்ப்புகள் உள்ளன எனக் கருதுவோம். அந்த வாய்ப்பைப் பெறுவதற்காக இரவும் பகலும் கண்விழித்து உழைத்து, தனிப்பட்ட சுகங்களையும் தியாகம் செய்து, முழு நேரத்தையும் அதற்காகவே செலவிடுகிறோம் என்றால், அதுவே விடாமுயற்சியின் உண்மையான வடிவமாகும்.
முயற்சி மற்றும் விடாமுயற்சி இரண்டும் ஒன்றல்ல. “முயற்சி” என்பது ஒரு இலக்கை அடைய ஒருமுறை அல்லது சிலமுறை மேற்கொள்ளப்படும் செயல். அதில் வெற்றி கிடைக்காவிட்டால், அதன் மீது இருந்த ஆர்வம் மெல்லக் குறைந்து, இறுதியில் அதை விட்டுவிடும் நிலை உருவாகலாம். ஆனால் “விடாமுயற்சி” என்பது முற்றிலும் வேறுபட்டது. நாம் ஆழமாக விரும்பும் ஒன்றை அடையும் வரை, தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறும் மனப்பாங்கே விடாமுயற்சி ஆகும்.
இதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. மின்விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரக்கணக்கான தோல்விகளைச் சந்தித்த பின்னரே தனது கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றார். அவரது வாழ்க்கை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லுகிறது: தோல்வி என்பது முடிவு அல்ல; அது வெற்றிக்கான ஒரு படிக்கட்டு மட்டுமே.
நாம் விரும்பிய ஒன்றை அடைவது எளிதானது அல்ல. அதற்காக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது அவசியம். வெற்றி என்னும் மதிப்புமிக்க பரிசு யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. அதற்காக நாம் நம்முடைய உழைப்பையும் நேரத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். இந்த உலகில் அனைவரும் ஒரே நிலைமையில் பிறப்பதில்லை. சிலர் செல்வச் செழிப்புடன் பிறக்கலாம்; சிலர் ஏழ்மையில் பிறக்கலாம். ஆனால் பிறப்பை நாம் தேர்ந்தெடுக்க முடியாவிட்டாலும், வாழ்வை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.
பிறப்பால் வந்த ஏழ்மையை மாற்ற முடியாமல் இருந்தாலும், முயற்சியால் உருவாகும் எதிர்காலத்தை நாம் மாற்ற முடியும். கல்வி என்பது அதற்கான மிகப் பெரிய ஆயுதமாகும். யார் உன்னை இகழ்ந்தார்களோ, எந்த இடங்களில் நீ அவமானத்தால் தலைகுனிந்தாயோ, அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, ஒருநாள் அவர்கள் முன்னிலையில் தலையை உயர்த்தி நிற்கும் அளவிற்கு முன்னேற வேண்டும்.
கடந்த காலம் அழிந்துபோன குப்பையைப் போன்றது; அதை மாற்ற முடியாது. நிகழ்காலம் சுழலும் கடிகாரத்தைப் போன்றது; அது ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் எதிர்காலம் வெற்று தாளைப் போன்றது; அதை எவ்வாறு வடிவமைப்பது என்பது நம் கைகளில் உள்ளது. எனவே, நம் வாழ்க்கை மற்றவர்கள் நினைப்பதுபோல் அல்ல, நாம் நினைப்பதுபோல அமைய வேண்டும்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால், நம் திறனுக்குள் மட்டுமல்ல, நம் எல்லைகளை மீறியும் முயற்சி செய்ய வேண்டும். “முடியும்” என்ற எண்ணம் மட்டுமின்றி, “முடித்தே தீருவேன்” என்ற உறுதியே வெற்றியை உருவாக்கும். எந்த செயலாக இருந்தாலும், அதை அடையும் வரை விடாமுயற்சியை கைவிடாமல் தொடர்ந்து செயல்பட்டால், வெற்றி நிச்சயம் நம்மை நாடி வரும். எனவே, வாழ்க்கைப் பயணத்தில் எந்தத் தடைகளும் வந்தாலும், தளராது முன்னேறுவோம். விடாமுயற்சி என்ற ஒளியை அணையாமல் காக்கும் வரை, வெற்றி என்ற விடியல் நம் வாழ்வில் நிச்சயம் உதிக்கும்.