அறிமுகம்
தொழிநுட்பம் மனித வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் ஆழமாக ஊடுருவியுள்ள ஒரு சக்தியாக மாறியுள்ளது. தகவல் தொடர்பு, கல்வி, மருத்துவம், வணிகம், போக்குவரத்து போன்ற பல துறைகளில் தொழிநுட்பம் மனித முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. அதேவேளை தொழிநுட்பத்தின் அளவுக்கு மீறிய பயன்பாடு மனிதனைச் சமூக உறவுகளிலிருந்து விலக்கி தனிமைப்படுத்துவதாகவும் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே தொழிநுட்பம் மனிதனை முன்னேற்றுகிறதா அல்லது தனிமைப்படுத்துகிறதா என்ற கேள்வி விமர்சன ரீதியில் ஆராயப்பட வேண்டியதாகும்.
தொழிநுட்பமும் மனித முன்னேற்றமும்
தொழிநுட்பம் மனித முன்னேற்றத்தின் முக்கிய கருவியாக விளங்குகிறது. இணையம் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் உலகின் எந்த மூலையிலும் உள்ள தகவல்களை சில நொடிகளில் பெற உதவுகின்றன. இணையவழிக் கல்வி, செயற்கை நுண்ணறிவு, மருத்துவ தொழில்நுட்பங்கள் போன்றவை மனித வாழ்க்கையின் தரத்தை உயர்த்தியுள்ளன. குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்க வழிவகுத்துள்ளது. தொழிநுட்ப வளர்ச்சி பொருளாதார முன்னேற்றத்திற்கும் புதிய வேலைவாய்ப்புகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
தொழிநுட்பத்தின் மிகப்பெரிய சாதனை மனிதனின் செயல்திறனை அதிகரித்ததே ஆகும். முன்னொரு காலத்தில் பல நாட்கள் எடுத்த வேலைகள் இன்று சில நிமிடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. கல்வித்துறையில் இணையவழிக் கற்றல், மின்னூல்கள், காணொளிப் பாடங்கள் போன்றவை அறிவைப் பெறும் வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளன. மருத்துவத் துறையில் நவீன கருவிகள் நோய்களைக் கண்டறிவதையும் சிகிச்சை அளிப்பதையும் எளிதாக்கியுள்ளன. உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் தகவல்களைப் பெறவும் தொடர்புகொள்ளவும் தொழிநுட்பம் உதவுகிறது. இதனால் அறிவு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றில் மனிதன் முன்னேற்றம் கண்டுள்ளான்.
தொழிநுட்பமும் மனித தனிமைப்படுத்தலும்
தொழிநுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மனித உறவுகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுகிறது. சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடும் பழக்கம் நேரடி மனித உறவுகளைக் குறைக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் தங்களது கைப்பேசிகளில் மூழ்கியிருப்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. இதனால் உரையாடல், உணர்வுப் பகிர்வு மற்றும் சமூக ஒற்றுமை பாதிக்கப்படுகின்றன. மேலும் இணைய அடிமைத்தனம், மனஅழுத்தம், தனிமை உணர்வு போன்ற உளவியல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.
சமூக ஊடகங்கள் மனிதர்களை இணைக்க உருவாக்கப்பட்டாலும் பல நேரங்களில் அவை உண்மையான மனித உறவுகளுக்குப் பதிலாக மெய்நிகர் உறவுகளை உருவாக்குகின்றன. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்துடன் நேரடியாகப் பழகும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ஒரே வீட்டில் வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கூட உரையாடல் குறைந்து கைப்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தனிமை, மனஅழுத்தம் மற்றும் சமூகப் பிரிவு போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.
தொழிநுட்பம் மனிதனை இயந்திரங்களின் மீது அதிகமாகச் சார்ந்திருக்கச் செய்துள்ளது. நினைவாற்றல், சிந்தனைத் திறன் மற்றும் நேரடி தொடர்பாடல் திறன்கள் குறைகின்றன என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இணைய அடிமைத்தனம், விளையாட்டு அடிமைத்தனம் மற்றும் சமூக ஊடகச் சார்பு அதிகரித்திருப்பது உளவியல் சிக்கல்களை ஏற்படுகிறது.
அன்றாட வாழ்வில் தொழிநுட்பத்தின் யதார்த்தங்கள்
“மனிதன் சந்திரனுக்குப் போனான் ஆனால் வீட்டின் ஹாலிலிருந்து சமையலறைக்குப் போக சோம்பேறியாகிவிட்டான்” என்ற கூற்று இன்று தொழிநுட்ப வளர்ச்சியைப் பற்றி பேசும்போது பொருத்தமாகத் தோன்றுகிறது. தொழிநுட்பம் மனிதனை முன்னேற்றியிருக்கிறதா என்றால் சந்தேகமின்றி “ஆம்” என்று சொல்லலாம். ஒரு காலத்தில் உறவினருக்குக் கடிதம் அனுப்பினால் பதில் வர ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்று “வாட்ஸ்அப்பில் பார்த்தும் ரிப்ளை செய்யவில்லை!” என்று ஒரு நிமிடத்திற்குள் சண்டை ஆரம்பித்துவிடுகிறது. இது தொடர்பாடலின் வேகமான முன்னேற்றம் அல்லவா?
முன்பு மாணவர்கள் நூலகத்தில் புத்தகங்களைத் தேடி அலைந்தார்கள். இன்று ஒரு கேள்வியை இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கான பதில்கள் கிடைக்கின்றன. ஆனால் பிரச்சினை என்னவென்றால் “படிக்க அமர்ந்த மாணவன்” ஐந்து நிமிடத்தில் “பூனை வீடியோ” பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அறிவைப் பெற வந்தவன் பொழுதுபோக்குடன் திரும்பிச் செல்கிறான்!
தொழிநுட்பம் மனிதனை தனிமைப்படுத்தியுள்ளதா என்றால் அதற்கும் ஆதாரங்கள் உண்டு. ஒரே வீட்டில் நான்கு பேர் இருந்தாலும் நால்வரும் நான்கு திரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தாத்தா தொலைக்காட்சி பார்க்கிறார், அப்பா கைப்பேசி பார்க்கிறார், அம்மா சமூக ஊடகத்தில் இருக்கிறார், மகன் விளையாட்டில் மூழ்கியிருக்கிறான். எல்லோரும் வீட்டில்தான் இருக்கிறார்கள் ஆனால் யாரும் யாருடனும் இல்லை!
முன்பு நண்பர்களைச் சந்திக்க மைதானத்திற்குச் சென்றார்கள். இன்று “ஆன்லைனில் சந்திப்போம்” என்று கூறுகிறார்கள். நண்பனின் பிறந்தநாளுக்குச் செல்ல நேரமில்லை ஆனால் சமூக ஊடகத்தில் 25 ஸ்டிக்கர்களும் 50 எமோஜிகளும் அனுப்ப நேரம் இருக்கிறது. உணர்வுகள் அதிகரிக்கவில்லை எமோஜிகள் மட்டுமே அதிகரித்துள்ளன.
தொழிநுட்பம் மனிதனை மிகவும் புத்திசாலியாகவும் கொஞ்சம் மறதிக்காரனாகவும் மாற்றியுள்ளது. ஏனெனில் இப்போது யாருக்கும் தொலைபேசி எண்கள் நினைவில் இல்லை. தன் பிறந்தநாளைக் கூட பேஸ்புக் நினைவூட்ட வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது!
முன்பு வீட்டில் அம்மா, “சாப்பிட வா!” என்று மூன்று முறை கூப்பிட வேண்டியிருந்தது. இன்று “Wi-Fi Off பண்ணிடுறேன்!” என்ற ஒரே வார்த்தையில் எல்லோரும் ஓடிவருகிறார்கள்.
தொழிநுட்பம் மனிதனை உலகத்துடன் இணைத்துவிட்டது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் என்ன என்று கேட்டால் கூகுளுக்குக்கூட தெரியாது! முன்பு காதலர்கள் நிலாவைப் பார்த்து பேசினார்கள். இன்று “நீ ஆன்லைன்ல இருக்கிறாய் ஏன் என் மெசேஜுக்கு ரிப்ளை பண்ணல்?” என்று சண்டை போடுகிறார்கள். மனிதன் செயற்கை நுண்ணறிவை உருவாக்கிவிட்டான். ஆனால் இன்னும் டிவி ரிமோட் எங்கே வைத்தான் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சம் என்ன தெரியுமா? நண்பன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான் ஆனாலும் மீம் அனுப்புவது WhatsApp-ல் தான்! முன்பு குடும்பப் புகைப்படம் எடுக்க வருடத்திற்கு ஒருமுறை வாய்ப்பு கிடைத்தது. இன்று 100 செல்ஃபி எடுத்த பிறகும் “இந்த ஆங்கிள் சரியில்லை” என்று மீண்டும் எடுக்கிறோம்.
கூகுள் வந்த பிறகு மனிதனின் நினைவாற்றல் குறைந்துவிட்டது. ஏனெனில் “எனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை கூகுளுக்குத் தெரிந்தால் போதும்’ என்ற நிலை வந்துவிட்டது. முன்பு மக்கள் காலை எழுந்ததும் கடவுளை நினைத்தார்கள். இன்று பலர் முதலில் மொபைலைத்தான் பார்க்கிறார்கள்: “எத்தனை Notification வந்திருக்கு?’ என்று.
தொழிநுட்பம் நேரத்தை மிச்சப்படுத்த உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த மிச்சமான நேரம் முழுவதும் Reels பார்க்கவே செல்கிறது. வீட்டில் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால் அது குடும்ப ஒற்றுமையால் அல்ல எல்லோருடைய மொபைலும் சார்ஜ் ஆகிக்கொண்டிருப்பதால்தான்!
முடிவுரை
விமரிசன ரீதியில் பார்க்கும்போது தொழிநுட்பம் தன்னிச்சையாக மனிதனை தனிமைப்படுத்துவதில்லை, அதன் பயன்பாட்டு முறையே அதனை நிர்ணயிக்கிறது. மனித நலனையும் சமூக உறவுகளையும் வலுப்படுத்தும் விதத்தில் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தினால் அது முன்னேற்றத்திற்கான கருவியாக அமையும். ஆனால் மனித உறவுகளுக்குப் பதிலாக தொழிநுட்பத்தை மையப்படுத்தும்போது அது தனிமையையும் சமூக விலகலையும் உருவாக்கும்.
தொழிநுட்பத்தை முழுமையாகக் குறை கூற முடியாது. அது ஒரு கருவி மட்டுமே. கத்தியால் காயப்படுத்தவும் முடியும் அறுவைச் சிகிச்சை செய்யவும் முடியும். அதுபோல தொழிநுட்பமும் மனிதனின் பயன்பாட்டைப் பொறுத்தே நன்மையையோ தீமையையோ வழங்குகிறது. மனித உறவுகள், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நேர மேலாண்மை ஆகியவற்றுடன் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தினால் அது முன்னேற்றத்திற்கான சக்தியாக அமையும்.
தொழிநுட்பம் ஒரு நல்ல வேலைக்காரன் ஆனால் மோசமான எஜமானன். அதை நாம் கட்டுப்படுத்தினால் அது முன்னேற்றத்திற்கான கருவியாக இருக்கும். அது நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கினால் தனிமைக்கும் அடிமைத்தனத்திற்கும் வழிவகுக்கும். ஆகவே தொழிநுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் தொழிநுட்பத்தால் பயன்படுத்தப்படக் கூடாது.