இயந்திரம் சிந்திக்கிறது இளைஞன் என்ன செய்வான்?

செயற்கை நுண்ணறிவும் இன்றைய இளைஞர்களும்

இன்று காலை எழுந்தவுடன் உங்கள் மகன் ஒரு AI கருவியிடம் கேட்கிறான்  “இந்தக் கணக்கு எப்படிப் போடுவது?” இரண்டு நொடியில் விடை வருகிறது. உங்கள் மகள் ஒரு கட்டுரையை AI எழுதச் சொல்கிறாள், அது ஐந்து நிமிடத்தில் தயாராகிவிடுகிறது. ஆனால் அதை யாரும் கொஞ்சமேனும் யோசிப்பதில்லை இந்த வசதி நம் பிள்ளைகளின் சிந்திக்கும் திறனை நமக்கு தெரியாமலேயே திருடுகிறதா?

செயற்கை நுண்ணறிவு, அதாவது Artificial Intelligence என்பது இப்போது வெறும் தொழில்நுட்பத்தின் பொம்மை அல்ல. அது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையிலும் நுழைந்துவிட்டது. வேலை தேடுதல் முதல் விண்ணப்பப் படிவம் நிரப்புதல் வரை, மருத்துவ ஆலோசனை முதல் திரைப்படம் பரிந்துரை வரை AI நம்மை வழிநடத்துகிறது. இது ஒரு புரட்சி என்று சிலர் கொண்டாடுகிறார்கள். ஆனால் நம் நடுத்தர வர்க்க குடும்பங்களில் வளரும் இளைஞர்களுக்கு இது என்ன அர்த்தம் என்று யாராவது யோசித்திருக்கிறோமா?

வாய்ப்பா? அல்லது அச்சுறுத்தலா?

உலகெங்கும் ஆராய்ச்சிகள் காட்டுவது என்னவென்றால், வரும் பத்து ஆண்டுகளில் இன்று நாம் தெரிந்த பல வேலைகள் AI-ஆல் மாற்றப்படும். கணக்கு வழக்கு, தரவு உள்ளீடு, வாடிக்கையாளர் சேவை, மொழிபெயர்ப்பு  இவை மட்டுமல்ல, வரைகலை வடிவமைப்பு, சட்ட ஆவண தயாரிப்பு என்று பட்டியல் நீளுகிறது. இது கேட்கும்போது பயமாக இருக்கிறது.

ஆனால் உண்மை என்னவென்றால், வரலாற்றில் எல்லா தொழில்நுட்ப புரட்சிகளும் பழைய வேலைகளை அழிக்கும்போதே புதிய வேலைகளையும் உருவாக்கின. ஆவியந்திரம் வந்தபோது குதிரை வண்டிக்காரர்கள் வழிதவறினார்கள், ஆனால் இரயில் ஓட்டுநர்களும் பொறியாளர்களும் பிறந்தார்கள். இன்றும் அவ்வாறே நடக்கும். AI prompt engineer, data ethicist, human-AI interaction designer என்று புதிய பெயர்களில் புதிய வேலைகள் வருகின்றன. ஆனால் இந்த வாய்ப்புகளை பெற யார் தயாராக இருக்கிறோம் என்பதுதான் இன்றைய கேள்வி.

கல்வி முறை காலாவதியாகிவிட்டதா?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் இன்னும் பத்தாண்டு பழைய பாடத்திட்டத்தில் இளைஞர்களை ஆயத்தப்படுத்துகின்றன. மனப்பாடம் செய்வது, தேர்வு எழுதுவது, மதிப்பெண் பெறுவது  இந்த வட்டத்தில் சுழலும் மாணவர்கள் AI உலகில் என்ன செய்வார்கள்? AI-க்கு ஏற்கனவே மனப்பாடம் தெரியும். AI-க்கு கணக்கு வேகமாக போடத் தெரியும். ஆனால் AI-க்கு இன்னும் முழுமையாக தெரியாதது என்ன? உணர்ச்சி, சூழல் புரிதல், படைப்பாற்றல், தலைமைத்துவம், மற்றும் மனித உறவுகளின் சூட்சுமம்.

எனவே நம் கல்வி முறை இப்போதே மாற வேண்டும். “என்ன படிக்கிறோம்” என்பதை விட “எப்படி சிந்திக்கிறோம்” என்பது முக்கியம். விமர்சன சிந்தனை, குழு ஒத்துழைப்பு, சிக்கல் தீர்க்கும் திறன்  இவை இனி சேர்தி பாடங்கள் அல்ல; இவையே அடிப்படை திறன்கள்.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் ஐந்து லட்சம் பொறியியல் மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு AI கருவிகளை திறம்பட பயன்படுத்த தெரியும்? எத்தனை பேர் ஒரு எளிய machine learning மாதிரியை புரிந்துகொண்டிருக்கிறார்கள்? இந்த அறிவு இடைவெளியை நிரப்பவே இப்போது அரசும் தனியாரும் AI கல்வி திட்டங்களை அறிவிக்கின்றன. ஆனால் திட்டங்கள் மட்டும் போதாது  மனோபாவம் மாற வேண்டும்.

“AI என்னை வேலையிலிருந்து விரட்டும்” என்ற அச்சத்தை விட்டு, “AI என்னை வலிமைப்படுத்தும் கருவி” என்ற நம்பிக்கைக்கு மாற வேண்டும். ஒரு மருத்துவர் AI-ஐ பயன்படுத்தி நோயாளியை ஐந்து நிமிடத்தில் சரியாக கண்டறியலாம்  ஆனால் நோயாளியின் கண்களில் நம்பிக்கை ஊட்டுவது இன்னும் மனித மருத்துவரின் வேலையே.

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்

உங்கள் பிள்ளை AI-ஐ பயன்படுத்துவதை தடுக்காதீர்கள்  எப்படி, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுங்கள். கணிப்பொறி வந்தபோது சிலர் அதை “மூளையை சோம்பேறியாக்கும்” என்று சொன்னார்கள். ஆனால் கணிப்பொறி அறிந்தவர்கள் இன்று உலகை வழிநடத்துகிறார்கள். அதே நிலை இப்போது AI-க்கும் பொருந்தும். AI பயன்படுத்தாமல் வளர்ந்த குழந்தை நாளை digitally illiterate ஆக இருப்பான். அதை நாம் விரும்புகிறோமா?

முடிவுரை

செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் முடிவு அல்ல  அது ஒரு புதிய ஆரம்பம். தொழிற்சாலை வந்தபோது கை உழைப்பு மாறியது; இப்போது AI வருகிறது, மூளை உழைப்பு மாறுகிறது. ஆனால் மனித இதயம் அதன் அன்பு, அக்கறை, கனவு காண்கிற ஆற்றல்  அதை எந்த இயந்திரமும் மாற்ற முடியாது.

ஆகவே இன்றைய இளைஞனுக்கு ஒரே ஒரு செய்தி: AI-ஐ அஞ்சாதே, அதை ஆளு. உன் தனித்தன்மை, உன் உணர்வு, உன் மொழி, உன் கலாசாரம்  இவை உன்னிடம் மட்டுமே இருக்கின்றன. அவற்றை AI உலகில் கொண்டு வா. இயந்திரம் வேலை செய்யட்டும் மனிதன் வாழட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *