நிற உளவியல் (Color Psychology)

மனித வாழ்க்கையில் நிறங்கள் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. நாம் கண்களைத் திறந்த தருணத்திலிருந்து உறங்கச் செல்லும் நேரம் வரை பல்வேறு நிறங்களைப் பார்க்கிறோம். இயற்கையில் காணப்படும் பசுமை, வானத்தின் நீலம், மலர்களின் அழகான நிறங்கள், மனிதர்கள் அணியும் உடைகள், வீடுகளின் சுவர்கள், விளம்பர பலகைகள் என அனைத்திலும் நிறங்கள் நிறைந்துள்ளன. ஆனால் நிறங்கள் வெறும் அலங்காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. அவை மனித மனநிலை, உணர்ச்சி, சிந்தனை மற்றும் நடத்தையையும் பாதிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை.

இந்தத் தாக்கத்தை ஆய்வு செய்யும் உளவியல் துறையே “நிற உளவியல்” அல்லது “Color Psychology” ஆகும். மனிதர்கள் பல நேரங்களில் அறியாமலேயே நிறங்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றனர். சில நிறங்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன, சில நிறங்கள் அமைதியை உருவாக்குகின்றன, சில நிறங்கள் உற்சாகத்தையும், சில நிறங்கள் பயம் அல்லது பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.

ஒருவர் ஒரு அறைக்குள் நுழையும் போது அந்த அறையின் நிறம் அவரின் மனநிலையை மாற்றக்கூடும். வெளிர் நிறங்கள் மனதை இலகுவாக உணரச் செய்யும். அதேவேளை அடர்ந்த நிறங்கள் சில சமயங்களில் சோகத்தையோ தனிமையையோ உணரச் செய்யக்கூடும். இதனால் தான் பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் குறிப்பிட்ட நிறங்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக மருத்துவமனைகளில் அதிகமாக பச்சை மற்றும் நீல நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை மன அமைதியை ஏற்படுத்துகின்றன. நோயாளிகள் பதற்றமின்றி அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்நிறங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

முக்கிய நிறங்களும் அவற்றின் தாக்கங்களும்

1. சிவப்பு நிறம் (Red)

சிவப்பு நிறம் மிகவும் சக்திவாய்ந்த நிறமாகக் கருதப்படுகிறது. இந்த நிறம் உற்சாகம், ஆற்றல், காதல் மற்றும் ஆபத்து போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. ஒருவர் சிவப்பு நிறத்தைப் பார்க்கும் போது இதயத் துடிப்பு கூட அதிகரிக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் பல உணவகங்களிலும் விளம்பரங்களிலும் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது. இது மனிதர்களின் கவனத்தை விரைவாக ஈர்க்கிறது. அதே நேரத்தில் அதிகமான சிவப்பு கோபம் அல்லது மனஅழுத்தத்தையும் உருவாக்கக்கூடும். ஒரு தேர்வு அறை முழுவதும் சிவப்பு நிறத்தில் இருந்தால் மாணவர்கள் பதற்றம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் சில உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2. நீல நிறம் (Blue)

நீல நிறம் மனித மனதில் அமைதியையும் நம்பிக்கையையும் உருவாக்கும் நிறமாக பார்க்கப்படுகிறது. கடலும் வானமும் நீலமாக இருப்பதால் மனித மனம் இயல்பாகவே இந்த நிறத்துடன் அமைதியை இணைத்துக் கொள்கிறது. அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நீல நிறம் பயன்படுத்தப்படுவதற்குக் காரணம் கவனச்சேர்மையை அதிகரிக்க உதவுவது என்பதாகும். பல பெரிய நிறுவனங்களும் தங்களின் logo களில் நீல நிறத்தைப் பயன்படுத்துகின்றன. ஏனெனில் அது நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது. ஒருவரின் மனம் குழப்பமாக இருக்கும் போது நீல நிற சூழல் அவருக்கு சற்றே அமைதியான உணர்வை தரக்கூடும்.

3. பச்சை நிறம் (Green)

பச்சை நிறம் இயற்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மரங்கள், செடிகள், வயல்கள் போன்றவற்றின் நிறமாக இருப்பதால் இது புத்துணர்ச்சி மற்றும் மன அமைதியை அளிக்கிறது. இன்று நகர வாழ்க்கையில் மனஅழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பூங்காக்கள் மற்றும் இயற்கை சூழல்களில் நேரம் செலவிட விரும்புவதற்கும் இதுவே ஒரு காரணமாகும். பசுமையான சூழல் மனித மனதை அமைதிப்படுத்துகிறது. அதனால் தான் சில பள்ளிகளில் மற்றும் மருத்துவமனைகளில் பச்சை நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

4. மஞ்சள் நிறம் (Yellow)

மஞ்சள் நிறம் மகிழ்ச்சி மற்றும் சுறுசுறுப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இது சூரிய ஒளியை நினைவூட்டுவதால் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை உருவாக்குகிறது. குழந்தைகள் பொருட்கள், கல்வி விளம்பரங்கள் மற்றும் விளையாட்டு பொருட்களில் மஞ்சள் நிறம் அதிகம் காணப்படுவதற்குக் காரணம் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் தன்மை அதற்கு இருப்பதாலாகும். ஆனால் மிக அதிகமான மஞ்சள் நிறம் சில நேரங்களில் கண் சோர்வையும் எரிச்சலையும் உருவாக்கக்கூடும்.

5. கருப்பு நிறம் (Black)

கருப்பு நிறம் மர்மம், அதிகாரம் மற்றும் கம்பீரத்தைக் குறிக்கிறது. சிலருக்கு இது சோகத்தையும் துக்கத்தையும் நினைவூட்டலாம். ஆனால் நவீன உலகில் கருப்பு நிறம் மிகவும் அழகான மற்றும் கவர்ச்சியான நிறமாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதர் அணியும் உடையின் நிறம் கூட அவரைப் பற்றிய மற்றவர்களின் எண்ணங்களை மாற்றக்கூடியது. உதாரணமாக கருப்பு நிற உடை அணிந்த ஒருவர் தன்னம்பிக்கை மிக்கவராக தோன்றலாம்.

வணிகம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் நிறங்கள்

நிறங்கள் மனிதர்களின் வாங்கும் பழக்கங்களையும் பாதிக்கின்றன என்பது மிகவும் சுவாரசியமான விடயமாகும். பல fast food நிறுவனங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்துகின்றன. ஏனெனில் அவை பசியைத் தூண்டும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் luxury பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் கருப்பு அல்லது தங்க நிறங்களை அதிகம் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் பொருளின் மதிப்பு மற்றும் கம்பீரத்தை வெளிப்படுத்துகின்றனர். விளம்பர உலகில் நிறங்களுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்குக் காரணம் மனித மனதை அவை எளிதில் பாதிக்கக்கூடியது என்பதாலாகும்.

ஒரு மனிதரின் மனநிலையை நிறங்கள் எவ்வளவு ஆழமாக பாதிக்கின்றன என்பதை நாம் அன்றாட வாழ்க்கையிலேயே காண முடிகிறது. சிலர் சோகமாக இருக்கும் போது வெளிர் நிற உடைகளை அணிந்து மனநிலையை மாற்ற முயற்சிக்கிறார்கள். சிலர் வீட்டின் சுவர்களை அமைதியான நிறங்களில் பூசுவதன் மூலம் மன அமைதியை உருவாக்க விரும்புகின்றனர்.

முடிவுரை

இதனால் நிறங்கள் வெறும் கண்களுக்கு தெரியும் காட்சிகள் அல்ல மாறாக அவை மனித உணர்வுகளோடு நேரடியாக தொடர்புடையவை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே நிறங்கள் மனித வாழ்க்கையில் மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறலாம். அவை மனிதர்களின் உணர்ச்சி, சிந்தனை, நடத்தை, விருப்பம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை பாதிக்கின்றன. மனித மனதை வார்த்தைகள் மட்டுமல்ல, நிறங்களும் பேசுகின்றன என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *