பொட்டப் பிள்ளைக்கு படிப்பு வேணுமா?

“பொட்டப் பிள்ளைக்கு படிப்பு வேணுமா?” என்ற கேள்வி, ஒருகாலத்தில் எங்கள் வீட்டிலேயே ஒலித்ததுண்டு. அந்தக் கேள்வியை எழுப்பிய தலைமுறை வேறொரு காலத்தைச் சேர்ந்தது. ஆனால் இன்று உலகம் மாறியுள்ளது; அதனுடன் பெண்களின் நிலையும் உயர்ந்துள்ளது.

இன்றைய காலத்தில், பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்கவும், வேலை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார ரீதியாக முன்னேறவும் கல்வி மிக அவசியமானதாக மாறியுள்ளது. கல்வி என்பது வெறும் எழுத்தறிவை அளிப்பதல்ல; அது ஒரு பெண்ணின் சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் அடிப்படையாகும்.

கல்லூரி வாழ்க்கை எனக்கு இந்த உண்மையை மேலும் தெளிவாக உணர்த்தியது. கல்வி கற்றதன் மூலம், நான் எந்த மனிதரையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளக் கூடியவளாக மாறியுள்ளேன். என் குடும்பத்திலும் அது என் தந்தையாயிருந்தாலும், சகோதரனாயிருந்தாலும் அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை அமைதியாக ஏற்காமல், சரியான காரணங்களுடன் கேள்வி எழுப்பும் தைரியம் எனக்குக் கிடைத்துள்ளது. இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பலமாகும்.

ஒரு பெண்ணின் குரல் கேட்கப்பட வேண்டும் என்றால், அவளுக்கு அறிவும் விழிப்புணர்வும் தேவை. அந்த அறிவை வழங்குவது கல்விதான். கல்வி பெண்ணை அடக்கிவைக்கும் சங்கிலிகளை முறியடித்து, அவளை சுதந்திரமாக சிந்திக்கச் செய்கிறது.

அதனால் தான், “நான் கற்பேன் பணிக்குச் செல்லும் வரை கற்பேன்” என்ற உறுதியுடன் நிற்கிறேன். கல்வி என் அறிவை வளர்க்கும்; அதேசமயம் என் பொருளாதார நிலையும் மேம்படச் செய்யும் என்ற நம்பிக்கை என்னுள் வேரூன்றியுள்ளது.

ஒருகாலத்தில் கேள்வியாக இருந்த “பெண்களுக்கு படிப்பு தேவையா?” என்ற எண்ணம், இன்று பதிலாக மாறியுள்ளது—“பெண்களுக்கு கல்வி அவசியம்!” என. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *