மகிழ்ச்சியைதேடாதே!

            உன்னுடைய மகிழ்ச்சியை வேறருவரிடம் தேடாதே. ஏனெனில், மகிழ்ச்சி என்பது வெளியில் கிடைக்கக்கூடிய ஒன்று அல்ல; அது நம்முள் பிறந்து வளர வேண்டிய ஒரு உணர்வு. நாம் தேடும் இடங்களிலெல்லாம் அது இருக்காது; அதைத் தேடி அலைந்தால், இறுதியில் நாமே நம்மை இழந்து விடுகிறோம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி நம்முள் தான் உறைந்து கிடக்கிறது. அதை வெளிக்கொணர்வது நம்முடைய சிந்தனையும் அணுகுமுறையால் அவை சாத்தியம்.

நீ இருக்கும் இடங்களை அழகாக்கிக் கொள்; உன் புன்னகையால் சூழலை மலரச் செய். உன் மகிழ்ச்சி உனக்கே உரியது. அதை எவ்வாறு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும், எப்போது அதை உணர வேண்டும் என்பதையும் உன்னைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் அந்த மகிழ்ச்சி உனக்குள் மட்டும் தங்கிக் கொள்ளாமல், பிறரின் உள்ளங்களையும் ஒளிரச் செய்யும் தன்மையுடையதாக இருக்க வேண்டும்.

நாம் வாழ்க்கையில் அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வதால்தான் கவலைகள் உருவாகின்றன. நாம் கொடுக்கும் அன்பை அதே அளவில் திரும்ப பெற வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது ஏமாற்றங்கள் தோன்றுகின்றன. பிறர் நம் விருப்பப்படி நடக்கவில்லை என்றால் மனம் உடைகிறது. இவ்வாறான எதிர்பார்ப்புகளே நம்முடைய அமைதியையும் மகிழ்ச்சியையும் பறித்து விடுகின்றன. எனவே, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில், பிறர்மீது வைக்கும் நம்பிக்கையை விட நம்மீது வைக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டால் மன அமைதி பெருகும்.

நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் முயற்சி அவசியமானது. பிறரிடம் குறை காண்பதை விடுத்து, ஒவ்வொருவரையும் புன்னகையுடன் அணுகுவோம். நமது வார்த்தைகளில் பண்பும், செயல்களில் அன்பும் பொங்கட்டும். நாமே மகிழ்ச்சியாக இருப்பதோடு, மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் வேரூன்ற வேண்டும்.

“மகிழ்வித்து மகிழ்” என்ற வாழ்வியல் நெறி இங்கே நினைவுக்கு வருகிறது. வாழ்க்கையில் தேவைகளும் துன்பங்களும் அதிகமாக இருக்கலாம்; நாம் எதிர்கொள்ளும் சவால்களும் குறைவில்லை. ஆனால் அதற்கிடையில் நம்முடைய மகிழ்ச்சியை மட்டும் குறைத்து விட வேண்டிய அவசியமில்லை. அதையும் நாம் வளர்த்துக் கொள்ளலாம்; பகிர்ந்து கொள்ளலாம்.

மகிழ்ச்சி என்பது தேடிக்கொண்டு செல்ல வேண்டிய இலக்கு அல்ல; உருவாக்கிக் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறையாகும். அதை நம்முள் வளர்த்து, பிறருடன் பகிர்ந்துகொண்டால், வாழ்வு இனிமையாலும் அமைதியாலும் நிரம்பி வழியும். ஆகையால், மகிழ்ச்சியாக இருங்கள்; மற்றவர்களையும் மகிழ்வித்து வாழுங்கள். அதுவே முழுமையான வாழ்க்கையின் உண்மையான அர்த்தமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *