முதுகலை முதலாமாண்டு தமிழிலக்கியம் பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவியாக்குறிச்சி ( தன்னாட்சி)
மற்றவர்களைப் போல நான் இல்லை; நான் முற்றிலும் மாறுபட்ட மனிதன் என்று நான் எனக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்வேன். காரணம், இந்த பூமியில் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்து, ஏதாவது சிறப்பாகச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த எண்ணத்திற்குத் துணைபுரிவதுபோல், சில நேரங்களில் நான் என் கைபேசியில் காணும் குறும்படங்களிலும் (reels) சில வரிகள் என்னுள் புதுமையான ஊக்கத்தை விதைக்கின்றன.
அவ்வாறான வரிகளில் என்னை ஆழமாகத் தொட்ட ஒன்று: “விதைத்தவன் தூங்கலாம்; ஆனால் விதைகள் தூங்காது.” இந்தச் சொல்லின் பொருளை நான் என் வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்தபோது, “விதைத்தவன்” என்பது நான்; “விதைகள்” என்பது என் இலக்குகள், என் கனவுகள் என்று புரிந்துகொண்டேன். நாம் விதைக்கும் எண்ணங்களும் முயற்சிகளும் ஒருநாளும் வீணாகாது; அவை காலம் வரும் போது நிச்சயமாக முளைக்கும் என்பதே இதன் உண்மை.
எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்ற கனவு ஒவ்வொருவருக்கும் இருப்பதுபோல, எனக்கும் உள்ளது. அந்தக் கனவை அடைய வழிகளைத் தேடுவது அவசியம். வாழ்க்கை என்பது ஆலோசனை, தேடுதல், முயற்சி, வெற்றி, புகழ் என்று பல படிகளைக் கொண்ட பயணம். அந்தப் பயணத்தில் நான் இப்போது “முயற்சி” என்ற கட்டத்தில் நிற்கிறேன். மற்ற படிகளைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன். ஏனெனில், தேடுதலும் முயற்சியும் சரியான பாதையில் இருந்தால், வெற்றியும் புகழும் தானாகவே என்னை வந்து சேரும்.
“உன் கடமையை நீ செய்; பலனை எதிர்பார்க்காதே” என்ற நெறியும் என் மனதில் அடிக்கடி ஒலிக்கிறது. இந்த எண்ணம் என்னை நிலைத்திருக்கச் செய்கிறது. நான் தனிமையில் இருக்கும் நேரங்களில், என் எண்ணங்களுடனும் கனவுகளுடனும் உரையாடுவேன். அந்தத் தனிமை எனக்கு ஒருபோதும் சுமையாகத் தோன்றவில்லை; மாறாக, அது இனிமையான அனுபவமாகவே இருந்தது. தனிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது அதை அணுகும் நம்முடைய சிந்தனை முறையிலேயே இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்.
எனவே, ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனிமையை அனுபவித்து பார்க்க வேண்டும். அந்த நேரங்களில் தான் நம்முள் மறைந்து கிடக்கும் விருப்பங்களும் ஆசைகளும், அதைவிட முக்கியமாக நம்முடைய உள்ளார்ந்த சக்தியும் வெளிப்படும். நம்முள் எழும் எண்ணங்களை ஆராய்ந்து பார்ப்பதும், அவற்றை சீரமைப்பதும் மிக அவசியம்.
எப்போதும் நம் சிந்தனைகள் தெளிவாகவும் உயர்வாகவும் இருந்து, நம் செயல்கள் அவற்றை நோக்கி நகர்ந்தால், நாம் விதைக்கும் விதைகள் ஒருநாளும் உறங்காது. அதுபோலவே, அவற்றை விதைக்கும் நாமும் நின்று விடமாட்டோம். தொடர்ச்சியான முயற்சியால், நாம் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் வெற்றியை நோக்கிச் செல்கின்றன.
நாளை நமதே; இன்றும் நமதே. அந்த நம்பிக்கையுடனும் முயற்சியுடனும் முன்னேறினால், நம் வாழ்க்கை நிச்சயமாக அர்த்தமுள்ளதாக மாறும்.