ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பொறுப்புணர்வு என்பது இன்றியமையாத பண்பாகும். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ளவும், சரியான முடிவுகளை எடுக்கவும், மனிதன் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். பொறுப்பு என்பது வெறும் கடமையல்ல; அது நம் நம்பிக்கையையும் நம் நெறியையும் பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான குணமாகும்.
என் வாழ்க்கையில் இதனை உணர வைத்த ஒரு அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன். கல்லூரியில் நான் பயின்றுகொண்டிருந்த காலத்தில், என் ஆசிரியர் எனக்கு வகுப்பு தலைவி என்ற பொறுப்பை வழங்கினார். அந்தப் பொறுப்பு எனக்கு ஒரு பெருமையாக இருந்ததோடு, ஒரு கடமையுணர்வையும் ஏற்படுத்தியது. நான் அந்தப் பொறுப்பை உண்மையுடனும் நேர்மையுடனும் மேற்கொண்டேன்.
வகுப்பில் எனக்கு தனிப்பட்ட நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், பொறுப்பில் இருந்தபோது நான் யாரையும் தனிப்பட்ட முறையில் பார்ப்பதில்லை. அனைத்து மாணவர்களையும் சமமாக அணுகினேன். “நான் தலைவி” என்ற அகங்காரத்துடன் அல்ல, “நான் பொறுப்பாளர்” என்ற பணிவுடன் செயல்பட்டேன். வகுப்பில் யாராவது தவறு செய்தால், அது யார் என்ற பாரபட்சமின்றி உடனடியாக ஆசிரியரிடம் தெரிவித்தேன். நட்பு என்ற பெயரில் தவறுகளை மறைப்பதை விட, ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதே முக்கியம் என்று நம்பினேன்.
ஒருநாள், எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் விடுமுறைக்கு செல்லும் முன், எனக்கு இருந்த முக்கியமான பொறுப்புகளை என் தோழியிடம் ஒப்படைத்தேன். அவள் அதைச் சரியாக மேற்கொள்வாள் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக, அவள் அந்தப் பொறுப்பை அலட்சியமாக கையாண்டாதால், ஆசிரியரிடம் இருந்து கண்டிப்பைப் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் எனக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுத்தது. பொறுப்பை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது; அதை முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். அதேபோல், நம்பிக்கை வைக்கும் நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கூட கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தேன்.
பொறுப்பும் நட்பும் வாழ்க்கையில் இரண்டும் முக்கியமானவை. ஆனால், பொறுப்பை முன்னிலைப்படுத்தி நட்பை நடத்தத் தெரிந்தால் மட்டுமே ஒருவர் உண்மையான தலைவராக உருவாக முடியும். பொறுப்புணர்வு இல்லாத நட்பு பல நேரங்களில் நம்மை சிக்கலில் ஆழ்த்தும்; ஆனால் பொறுப்புடன் கூடிய நட்பு நம்மை உயர்த்தும். எனவே, வாழ்க்கையில் எந்த நிலைமையிலும் நமக்குக் கொடுக்கப்படும் பொறுப்பை உண்மையுடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்வோம். அதுவே நம்மை ஒரு நல்ல மனிதராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் உருவாக்கும்.