என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால், அவர்களின் பெற்றோர் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சூழ்நிலையில் நான் சிறு வயதிலிருந்தே தனிமையைத் தோழனாகக் கொண்டு வாழக் கற்றுக்கொண்டேன். அந்தத் தனிமை என்னை உடைத்துவிடவில்லை; மாறாக, அது எனக்கு “அமைதி” என்ற அரிய பண்பை கற்றுக் கொடுத்தது.
அமைதியாக இருப்பது பலருக்குப் பலவீனமாகத் தோன்றலாம்; ஆனால் என் அனுபவத்தில் அது மிகப் பெரிய வலிமை. என் உறவினர்கள் பலர், “இவ்வளவு அமைதியாக இருக்காதே, அதிகமாகப் பேச வேண்டும்” என்று அறிவுறுத்துவார்கள். சிலர், “இப்படி இருந்தால் நீ ஒருநாள் பேச முடியாதவளாகி விடுவாய்” என்று கூட சொல்வார்கள். ஆனால் அதே மனிதர்கள், நான் கொஞ்சம் அதிகமாகப் பேசினால் “வாய்யாடி” என்ற பெயரைச் சூட்டுவார்கள். இந்த முரண்பாடுகள் எனக்குள் ஒரு உண்மையை உணர்த்தின மற்றவர்களின் கருத்துக்களுக்கு அளவே இல்லை; ஆனால் நம் இயல்பே நம்மை வரையறுக்கிறது.
இதனால் தான் நான் பல இடங்களில் அமைதியாக இருப்பதைத் தேர்ந்தெடுத்தேன். உறவினர்கள் இருக்கும் இடங்களில், பள்ளியிலும், கல்லூரியிலும், வெளிப்புற சூழல்களிலும். நண்பர்களிடம் கூட மனம் திறந்து பேச வேண்டும் என்ற ஆசை இருந்தும், அது முழுமையாக சாத்தியமாகவில்லை. குறைவாகப் பேசும் என் இயல்பு, எனக்கு நண்பர்களின் எண்ணிக்கையைச் சுருக்கியிருக்கலாம்; ஆனால் அது என் உள்ளத்தின் ஆழத்தை வளர்த்தது.
அமைதி எனக்கு பல அர்த்தங்களை அளித்தது. அது எனது கவனத்தை கூர்மையாக்கியது; வகுப்பறையிலும் வீட்டிலும் நான் சிறப்பாகப் படிக்க உதவியது. என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கச் செய்து, மன அழுத்தத்தைக் குறைத்து, சிறிய பிரச்சனைகளை பெரிதாக மாறாமல் காக்கும் கவசமாக அமைந்தது.
சத்தமும் இரைச்சலும் நிரம்பிய இந்த உலகத்தில், அமைதி எனக்கு ஒரு தனித்துவமான இடமாக மாறியது. அது என் சிந்தனைத் திறனை வளர்த்தது; புதிய யோசனைகளையும் கற்பனைகளையும் உருவாக்க உதவியது. சண்டைகள் எழும் தருணங்களில் அமைதியாக இருப்பது, உறவுகளில் விரிசல் ஏற்படாமல் தடுக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்.
அமைதியாக இருப்பவர்கள் பலவீனர்கள் அல்ல; அவர்கள் தங்களை அடக்கிக் கொள்ளும் வலிமையுடையவர்கள். அவர்கள் பேச வேண்டிய நேரத்தைத் தெரிந்து கொண்டு பேசுவார்கள். இந்த உண்மைகளை எல்லாம் இணைத்து பார்க்கும்போது, அமைதி என்பது வெறும் சொல் அல்ல ஒரு வாழ்வியல் தத்துவம்.
எனக்கு பிடித்தது இந்த அமைதியே. அது என் தனித்துவம், என் பலம், என் அடையாளம். வாழ்க்கையின் எந்தச் சூழலிலும், நான் இந்த அமைதியை என்னோடு கொண்டுசெல்ல விரும்புகிறேன். ஏனெனில், என் அமைதியில்தான் என் முழுமை உள்ளது.