ஒரு கிராமத்தில் தாய் மற்றும் தந்தை வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, நீண்டநாள் விருப்பமாகக் காத்திருந்த பெண் குழந்தையும் பிறந்தாள். அந்தத் தந்தை சென்றிராத கோவிலே இல்லை; பெற்றெடுத்த அந்த மகள், அவர்களின் பிரார்த்தனைகளின் பலனாகவே பிறந்தவள். அவளைத் தன் கையில் ஏந்திய அந்த நொடியிலே, தந்தையின் கண்களில் கண்ணீரும் முகத்தில் புன்னகையும் மலர்ந்தன.
அந்தச் சிறுமி சிறு வயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கினாள். பள்ளி, கல்லூரி என அவளது கல்விப் பயணம் சிறப்பாக முன்னேறியது. அவளது மனதில் ஒரு உயர்ந்த கனவு, ஒரு ஆசிரியராக வேண்டும் என்ற இலக்கு தெளிவாக பதிந்திருந்தது. இந்தக் கனவு தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மகன் தன் சொல் கேட்காமல் இருப்பது அவர்களுக்கு ஒரு வருத்தமாகவே இருந்தது.
இந்நிலையில், பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவளுக்கு அந்த நேரத்தில் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லாவிட்டாலும், பெற்றோரின் விருப்பத்தை மதித்து சம்மதித்தாள். ஆனால் அவளது உள்ளத்தில் ஒரு பயம் எழுந்தது என் கனவுகள் இங்கேயே முடங்கி விடுமோ?” என்ற அச்சம்.
ஆனால் வாழ்க்கை அவளுக்குச் சிறந்த திருப்பத்தை அளித்தது. அவளது கணவர், அவளது கனவுகளின் மதிப்பை உணர்ந்தவர். “நீ நன்றாகப் படிக்க வேண்டும்” என்று ஊக்குவித்து, அவளது கல்விப் பயணத்திற்கு துணைநின்றார். அந்த ஆதரவின் பலனாக, திருமணத்திற்குப் பின்னரும் அவள் தன் படிப்பை உறுதியாகத் தொடர்ந்து, இறுதியில் தன் கனவை நனவாக்கி ஒரு பேராசிரியராக உயர்ந்தாள்.
அவள் அடைந்த அந்த உயர்வு, அவளது பெற்றோரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியால் நிரப்பியது. அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், அன்புடனும் மரியாதையுடனும் பார்த்துக் கொண்டாள். ஒரு பெண் தனது கனவுகளை கைவிடாமல் முயற்சி செய்தால், எந்தச் சூழலும் அவளுக்கு தடையாக இருக்க முடியாது என்பதை அவளது வாழ்க்கை நிரூபித்தது.
ஒரு பெண் கல்லூரிப் பருவத்திலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன் கல்வியையும் கனவுகளையும் விட்டுவிடக் கூடாது. கல்வி என்பது ஒரு பெண்ணின் முதல் ஆயுதம்; அது அவளுக்கு தன்னம்பிக்கையையும் தன்னிறைவும் அளிக்கும். எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும், கல்வி மட்டுமே அவளுக்கு உண்மையான துணையாக இருக்கும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் சக்தி தன்னிடமே இருப்பதை உணர வேண்டும். கனவுகளைத் துறக்காமல், கல்வியைத் தழுவி முன்னேறினால், வாழ்க்கை வெற்றியாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பும் என்பது நிச்சயம்.