ஒரு ஆண் ஒரு பெண்ணை ரசிப்பதும் காதலிப்பதும் இயல்பான ஒன்று. ஆனால் ஒரு பெண் மற்றொரு பெண்ணை ரசித்து, “அவளைப் போல நாம் இருக்க வேண்டும்” என்று எண்ணுவது சற்றே வித்தியாசமான அனுபவம். அந்த ரசிப்பு வெளிப்புற அழகில் மட்டுமே முடிவதில்லை; அது வாழ்க்கையைச் சுமக்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, உழைப்பு, மனவலிமை போன்ற ஆழமான பண்புகளை நோக்கி விரிகிறது.
நான் ரசிக்கும் பெண்கள், சாதாரண அழகில் மட்டும் அடங்குபவர்கள் அல்ல. அடுப்பின் புகையோடு நாளைத் தொடங்கி, குடும்பத்தின் தேவைகளைத் தாங்கி நிற்கும் வீட்டு பெண்களும், வானத்தை வென்று ஜெட் இயந்திரங்களை ஓட்டும் பெண்களும் இருவரும் எனக்கு சமமான வியப்பை அளிப்பவர்கள். ஒரு வீட்டில் காலையில் காபி முதல் இரவு உணவு வரை ஓய்வில்லாமல் இயங்கும் “உயிருள்ள இயந்திரம்” போல இருக்கும் பெண், அந்த இல்லத்தின் ஆன்மாவும் இதயமும் ஆவாள். பசியில் அழும் குழந்தையைத் தழுவி அணைக்கும் அந்த தாயின் அன்பில் நான் கண்ட புதுமை, எந்தப் புத்தகத்திலும் எழுதப்படாத வாழ்க்கைப் பாடமாகும்.
என் வாழ்க்கையில் என்னைத் தாக்கிய முதல் பெண் என் தாயே. ஆனால் அதனைத் தாண்டி, என் பள்ளிப் பருவத்தில் என் மனதில் அழியாத தடம் பதித்தவர் என் தமிழாசிரியை செல்வலட்சுமி அம்மாள். வெள்ளை ரோஜா போல அமைதியான தோற்றம், தலையில் மல்லிகைப் பூவின் மணம், அவர் ஒரு ஆசிரியையாக மட்டுமல்ல, வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்த வழிகாட்டியாகவும் இருந்தார். தமிழ் மொழியின் இனிமையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் எளிய சொற்களில் சொல்லித் தந்தவர் அவர்.
அதேபோல், என் அறிவியல் ஆசிரியை சுந்தராம்பாள் டீச்சரும் எனக்கு ஒரு பேர் ஆதர்சம். கிராமத்து மண்வாசனையோடு கூடிய அறிவாளி; சிறுவயதில் உழைப்பையும் படிப்பையும் இணைத்து வாழ்ந்தவர். அறிவியலைப் போதித்தாலும், வாழ்க்கையைப் புரியவைத்தவர். இன்று அவர் உயர்ந்த கல்விப் பட்டம் பெற்றவராக இருந்தாலும், தனது வேர்களை மறக்காத தன்மை அவரை இன்னும் உயர்வாக காட்டுகிறது.
என் சுற்றத்திலும் பல பெண்கள் என்னை ஈர்த்துள்ளனர். இனிய குரலுடன் வாழ்வைச் சுமக்கும் விவசாயி தேன்மொழி, வாழ்க்கையின் சிரமங்களையும் இனிமையாக்கிக் காட்டியவர். அதேபோல், கணவனை இழந்த பின்னரும் தளராது உழைத்து, ஒரு குழந்தையை வளர்த்து, இன்று தொழில்முனைவோராக உயர்ந்த செல்லம் அம்மாள் அவர் உண்மையிலேயே ஒரு சிங்கப் பெண். வாழ்க்கை அவளுக்கு சவால்களை அளித்தாலும், அவள் அதை வெற்றியாக மாற்றிக் காட்டிய விதம் மனதை நெகிழச் செய்கிறது.
இத்தகைய பெண்கள் அநைவரும் ஒரே செய்தியை நமக்குக் கூறுகின்றனர்: பெண் என்பது பலவீனத்தின் அடையாளமல்ல; அது பொறுமை, உறுதி, தன்னம்பிக்கை, போராட்டம் ஆகியவற்றின் சங்கமம். மகாபாரதத்தில் பீஷ்மரை எதிர்த்த அம்பை முதல், இன்றைய காலத்தில் துன்பங்களைத் தாண்டி முன்னேறும் பெண்கள் வரை, ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கைப் போரில் வெற்றி கண்ட போராளிகளே.
பாஞ்சாலி போல அவமானத்தைத் தாண்டியும், கண்ணகி போல நீதிக்காக நின்றும், தங்கள் வாழ்வை தாங்களே வடிவமைக்கும் பெண்கள் இந்த உலகின் உண்மையான வலிமை. அவர்கள் ஒவ்வொருவரும் உயர்ந்து விளங்க வேண்டும் என்பதே என் மனமார்ந்த ஆசை. பெண்களின் ஆற்றலை உணர்ந்து, அவர்களை மதித்து, அவர்களுடன் இணைந்து முன்னேறும் சமுதாயமே நம் எதிர்காலத்தை வளமாக்கும்.