உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் தன் அடிப்படை தேவைகள் போக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் சூழலை வேட்கையோடு எதிர்நோக்கி இருப்பான். இதற்கு கல்வி மிகப்பெரிய ஊடகமாக இயங்கி வருகிறது. இன்றைய கல்வி வெறும் பாட புத்தகங்களை அறிமுகப்படுத்துவதோடு அமைதியாக விடுகிறது.
மாணவர்களுக்கு வாழ்வியலை நோக்கும் சாரளமாக வாசிப்பு மட்டுமே அமைகிறது. ஒரு மாணவனின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது வாசிப்பு… எழுத்து அந்த வாசிப்பின் வெளிப்பாடு . அது வாசிப்பின் வழியாகவே இலக்கிய வானில் விரிவடையும்… மெல்ல மெல்ல சிறகசைத்துச் செல்லும் பறவை போல, புல்லின் மேல் இருக்கக்கூடிய சிறு பனித்துளி போல, அணில் தன் இரு கைகளால் சுமக்கும் உணவைப்போல மிக மிக அழகான மென்மையான ஒரு உணர்வினை இலக்கியம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தும்.
சிக்க வைப்பதற்கான பல கருவிகள் டிஜிட்டல் உலகில் கொட்டிக் கிடக்கின்றன .ஆனால் வாசிப்பு மட்டுமே அவர்களை மனிதர்களாக மனிதமுள்ளவர்களாக மாற்றும்.
மாணவர்களை சிந்தனையாளர்களாலும் சமூக உணர்வுள்ளவர்களாகவும் சரியானவற்றை சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் பொருளாகவும் காலத்தின் ஆகச் சிறந்த படைப்புகளை வழங்குவதன் வாயிலாக தம் மன உணர்வுகளை பிறருக்கு கடத்துபவர்களாகவும் உருவாக்குவது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை..
அவ்வகையில் கையெழுத்து பிரதியாக மாணவர்களின் படைப்புகளை வெளிக்கொண்டு வந்திருந்த என்னை, இணையத்தில் மாணவர் பக்கம் என்கின்ற ஒரு பகுதியினை வழங்கி அதன் வழியே அவர்களின் படைப்புகளை உலக வாசகர்களின் கையில் கொண்டு சேர்க்கக்கூடிய ஒரு மாபெரும் பணியில் புழுதியோடு இணைந்து செயல்படுவதில் பெருமகிழ்வு எனக்கு….
படைப்புகளை பெறுவதில் பெரிய சிக்கல்கள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை… தலைப்புகளையும் சூழல்களையும் அறிமுகப்படுத்தினால் வீரியமாக வெளிப்படும் மாணவர்களின் வார்த்தைகளைக் கண்டு வியந்து போகிறேன்….
வாருங்கள் பயணிப்போம்….
புதிய தலைமுறையை செதுக்குவதற்கான பணியில் இணைவோம்….
இன்றைய வாசகனே நாளைய தலைவன்
- யாரோ
முனைவர்.அ. மான்விழி ரஞ்சித்
பொறுப்பாசிரியர்
மாணவர் பக்கம்
புழுதி இணைய இதழ்