என் ஊர் திருவிழா

செஞ்சியில் நடைபெறும் திருவிழாக்கள், கிராம வாழ்க்கையின் ஆன்மாவையும், பண்பாட்டு பெருமையையும் பிரதிபலிக்கும் சிறப்பான நிகழ்வுகளாகும். குறிப்பாக முத்துமாரியம்மன் மற்றும் கங்கை அம்மன் கோவில்களின் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெறுகிறது. திருவிழாவிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே “காப்பு கட்டுதல்” நடைபெறும். அதன் பின்னர் யாரும் ஊரைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்ற ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதுவே திருவிழாவின் கட்டுப்பாடும் ஒற்றுமையும் ஆகும்.

திருவிழா நாளில் காலையிலேயே ஊர் முழுவதும் உற்சாகம் பொங்கும். கோவில் அலங்காரம், தோரணம் கட்டுதல், மின்விளக்குகள் அமைத்தல், ஒலிப்பெருக்கிகள் பொருத்துதல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபடுவர். இளைஞர்கள் உற்சாகமாக பேனர்கள் அமைத்து விழாவை அழகுபடுத்துவர். மதியம் பன்னிரண்டு மணியளவில் சக்தி கரகம் ஊரைச் சுற்றி வர, பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

மாலை நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகள் திருவிழாவின் சிறப்பை மேலும் உயர்த்துகின்றன. மாலை நான்கு மணிக்கு முத்துமாரியம்மன் கோவிலில் “கூழ் வார்த்தல்” நடைபெறும். பின்னர் ஊரின் பெண்கள் அனைவரும் அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவர். சக்தி கரகத்துடன் வீடு திரும்பி, தங்கள் இல்லங்களில் பூஜை செய்து பலவகை உணவுகளை சமர்ப்பிப்பர். இரவு நேரத்தில் அம்மனுக்கு சீர்வரிசைகள் பழங்கள், பூக்கள், வளையல்கள், புடவைகள் என பக்தியுடன் எடுத்துச் செல்லப்படும். இரவு பன்னிரண்டு மணியளவில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் ஊரைச் சுற்றி வருவது பக்தர்களுக்கு பேரானந்தம் அளிக்கிறது. அதனைத் தொடர்ந்து தெருக்கூத்து நடைபெறுகிறது.

மறுநாளில் திருவிழா மேலும் விறுவிறுப்பாக தொடர்கிறது. கடைகள் நிரம்பி, மக்கள் கூட்டம் அதிகரிக்கும். மதியம் பாலமுருகனுக்கு பால் குடம் எடுத்தல், மிளகாய் அபிஷேகம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். பிற்பகலில் சடல் சுற்றுதல், மாலை அணிவித்தல், வேல் குத்துதல், காவடி எடுத்தல், தீமிதித்தல் போன்ற பக்தி நிகழ்வுகள் நடைபெறும். சக்தி கரகம் தீமிதித்த பின், பக்தர்கள் அனைவரும் தீமிதித்து, காவடி ஏந்தி ஊரைச் சுற்றி நடனமாடுவர். இரவு முருகன் தேரோட்டமும், தெருக்கூத்தும் நடைபெறும்.

மூன்றாவது நாளில் “காப்பு கழித்தல்” நடைபெறும். வீதிகளில் பெண்கள் சாணம் தெளித்து கோலம் போடும்போது ஊர் முழுவதும் மணம் பரவும். வீடுகளில் சமைக்கும் உணவுகளின் நறுமணம் காற்றில் கலக்கும். பெண்கள் திச்சட்டி அடுக்கும் நிகழ்வும், ஆண்கள் காவடி எடுக்கும் நிகழ்வும் உற்சாகத்தை ஏற்படுத்தும். மஞ்சள் நீர் ஊற்றும் நிகழ்வுகள் ஊருக்கு சிரிப்பையும் சலசலப்பையும் தருகின்றன.

திருவிழாவின் ஒரு பகுதியாக, “மையான கொள்ளை” போன்ற மரபு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அப்போது சாமி வேடம் அணிந்தவர்கள் ஆவியுடன் நடந்து கொள்ள, மக்கள் அதனை பக்தியுடனும் வியப்புடனும் காண்கிறார்கள். பக்தர்கள் காய்கறி, பழம், நாணயம் போன்றவற்றை சமர்ப்பிக்கின்றனர்.

இதற்குப் பிறகும், செஞ்சி ராஜா கோட்டையில் அமைந்துள்ள கமலகண்ணியம்மன் கோவிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவமும் மிகச் சிறப்புடையது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கரகாட்டம், மயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறும். தேரோட்டத்தின் போது மக்கள் சங்கிலிகளைப் பிடித்து இழுக்கும் காட்சி, பக்தி மற்றும் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது. தேங்காய், பூசணி உடைத்து வழிபடும் வழக்கம் தொடர்கிறது. காவல்துறை பாதுகாப்புடன் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த திருவிழாக்கள் எங்கள் ஊரின் ஆன்மாவை பிரதிபலிப்பவை. பக்தி, ஒற்றுமை, பண்பாடு, மகிழ்ச்சி இவையனைத்தையும் ஒருங்கே கொண்ட இந்த விழா, எங்கள் வாழ்க்கையின் அழியாத நினைவாகத் திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *