தாயின் மறுவுருவம்

இவ்வுலகில் சிறந்தவர் யார் என்று கேட்டால், அனைவரும் ஒருமித்த குரலில் “தாய்” என்பார்கள். ஆனால் சிலர், தாயின் அன்பையும் அர்ப்பணிப்பையும் தங்கள் வாழ்வில் செயலாக்கி, பிறருக்காக வாழ்ந்து காட்டுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை, தாயின் மறுவுருவமாகவே விளங்குகிறது.

தான் பெற்ற பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பது மட்டுமன்றி, தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் பசியை அன்புடன் போக்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண் உள்ளார். விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்காக தன் கையால் உணவு சமைத்து, அக்கறையுடனும் ஆதரவுடனும் பரிமாறும் சமையல் பணியாளரான இவர், உண்மையில் அன்னையின் உருவமே. மாணவிகள் நேரத்தில் உணவருந்தாமல் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்ற எண்ணத்தில், அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து, தன் குடும்பத்திற்கான உணவுகளைச் சமைத்து முடித்து, பேருந்தில் பயணம் செய்து, காலை ஆறு மணிக்கே விடுதியில் பணியில் ஈடுபடுகிறார். எட்டு மணிக்குள் அனைத்து உணவுகளையும் தயார் செய்து, மாணவிகளை அன்புடன் உணவூட்டி பள்ளிக்குச் செலுத்துகிறார்.

ஒரு மாணவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, “என் வேலை என் பொறுப்பு” என்று விலகி நிற்காமல், நாட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி அவளைக் குணப்படுத்தும் அக்கறை இவருக்குண்டு. மாணவிகளின் நலன் மற்றும் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தினமும் இறைவனிடம் வேண்டிக் கொள்வதும் இவரின் இயல்பு. மாணவிகள் மத்தியில் “அக்கா” என்று அன்புடன் அழைக்கப்படும் இவர், தேர்வு நேரங்களில் மாணவிகளுக்கு ஆறுதலும் உற்சாகமும் அளிக்கும் அரிய மனிதர்.

ஒரு தாயைப் போல, மாணவிகள் தினமும் சந்தித்த அனுபவங்களையும் சிக்கல்களையும் பொறுமையுடன் கேட்டு, அவர்களுக்கு மனஅமைதியளிக்கிறார். “ஒரு குழந்தையும் பசியுடன் இருக்கக்கூடாது” என்ற உறுதியுடன் ஒவ்வொருவருக்கும் கவனமாக உணவு பரிமாறும் இவரது அன்பு அளவிட முடியாதது. விடுமுறை நாட்களிலும் மாணவிகள் தாமாக முன்வந்து அவருக்கு சமையலில் உதவுவதும், அவர்களுக்குள் உருவான அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. பெற்ற தாயிடம் மட்டுமே பகிரக்கூடிய நெஞ்சங்கனிந்த உணர்வுகளையும், இவளிடம் மாணவிகள் பகிர்ந்து கொள்வது, இவரின் மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது.

பண்டிகைக் காலங்களில் வீட்டில் செய்வதைப் போலவே பலவிதமான பலகாரங்களைத் தயாரித்து மாணவிகளுக்கு வழங்கும் இவரது பாசம், அவர்களை வீட்டு நினைவுகளையே மறக்கச் செய்கிறது. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற பண்டைய இலக்கியச் சொற்றொடரின் அர்த்தத்தை, தனது வாழ்வில் நடைமுறைப்படுத்தி வருகிறார் இவர். தன் நிறைவேறாத ஆசைகளையும் கனவுகளையும், மாணவிகளின் வெற்றிகளில் காண்பதே இவரது மகிழ்ச்சி.

தன் குடும்பத்தை விட விடுதி மாணவிகளோடு அதிக நேரம் செலவிடும் இவர், ஒருபோதும் அவர்களை திட்டியதோ கோபித்ததோ இல்லை. மாணவிகள் பள்ளி முடித்து சென்ற பிறகும், அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்து, அன்பைத் தொடர்ந்து பரிமாறிக் கொண்டிருப்பார். பல ஆண்டுகள் கழித்தும் மாணவிகளை பெயரால் நினைவில் கொண்டு அன்புடன் வரவேற்பது, இவரது இதயத்தின் பெருந்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.  மாணவிகளின் இதயங்களில் என்றும் நீங்கா இடம் உண்டு. உண்மையில், இவர் தாயின் மறுவுருவமே என்று கூறுவதில் எவ்வித ஐயமுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *