மாத்தி யோசி
இன்றைய சமுதாயத்தில் வாசிப்பு பழக்கம் குன்றிக்கொண்டே செல்கிறது. இதனால், இதையும் நீங்கள் வாசிக்காமலே விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை நான் எழுதுகிறேன். வருங்கால சந்ததியினரின் வாழ்வு ஒளிமயமானதாக மாற இருக்கின்றது. இதற்கு முதலில் இன்றைய கால மாணவர்களுக்கு வாழ்த்துகளை கூற ஆசைப்படுகின்றேன். ஏனெனில் சற்று சிந்தித்து நடந்தால் எதிர்காலம் நல்லதாக மாறிவிடும். ஆகையினால் எந்த ஒரு மாணவனோ மாணவியோ வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவே வேண்டாம்.
இன்றைய மாணவர்களாகிய எங்களுக்கு பெற்றோர்களை விட அறிவு கூடுதலாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அது உண்மைதான் ஏனென்றால் எமது பெற்றோர் வறுமையாலும், போர் சூழல் காரணமாகவும் அவர்களுடய அறிவில் குறை இருக்கும். கல்வியின் அருமை தெரிந்து செயல்பட்டார்கள். இதனால் அவர்கள் கற்காத கல்வியை நாம் கற்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். அவர்களுக்கு கல்வி அறிவு குறைவு, வெளியுலகம் தெரியாது என்று 24 மணி நேரமும் தொலைபேசியோடு இருக்கின்ற நாங்கள், படிப்பதற்கே நேரம் ஒதுக்காமல் படிப்பின் அருமை தெரியாத நாங்கள் கூறுவது மிகச் சரிதான்.
மாணவர்களாகிய நாங்கள் இன்று Al, Facebook, Games போன்றவற்றிற்கு அடிமையாகி இருப்பது மிக நன்று. ஏனென்றால் இவைதான் நமக்கு உணவு தரும், கல்வி தரும், செல்வம் தரும். எதிர்கால நல்வாழ்வு தரும் ஆகையினால் நாம் காலையில் நித்திரையை விட்டு எழும்பியது தொடக்கம் நித்திரைக்குச் செல்லும் வரை நாம் இந்த செயற்பாட்டிலே ஈடுபட வேண்டும். பாடசாலைக்குச் செல்கின்ற மாணவர்களாக இருந்தால் பாடசாலைக்குச் செல்லாமல் தினமும் பப்ஜி போன்ற கேம்களை விளையாடி அறிவு பரப்பை சுருக்கிக்கொள்வதனால் எதிர்கால வாழ்க்கையை மிக வேகமாக நாசமாக்கிக் கொள்ள முடியும்.
உலகத்தில் படித்தவர்கள் பலர் வாழ்க்கையில் சாதித்து இருக்கின்றார்கள். நாம் அவர்களைப் போல் இல்லாமல் சிறுச் சிறு அற்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு படிப்பில் அக்கறை செலுத்தாமல், படித்தவர்களை கொஞ்சமும் மதிக்காமல் இருப்பது நன்று. இவ்வாறு இருந்தால் நாம் எல்லோராலும் மதிக்கப்படுவோம்.
வள்ளுவர் கூறுகிறார்
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.”———— குறள் 69
என்று கூறுகிறார். அதாவது தாயானவள் பிள்ளையை பெறும்போது அவள் அனுபவிக்கின்ற வலியை தன் மகனை சான்றோர்கள் என்று மற்றவர்கள் கூறும்போது தான் அந்த வலி குறையும் என்று வள்ளுவர் கூறுகிறார். ஆனால் இன்றைய பிள்ளைகளாகிய நாம் பிறக்கும் போது என்ன வலியைத் தன் தாய்க்கு கொடுத்தோமோ அந்த வலியை நாம் இறக்கும் வரை தாய்க்குக் கொடுக்கின்றோம் அது ஒரு நல்ல பழக்கம் தான்.
இந்தக் காலத்தில் படித்தவர்களின் பேச்சை கேட்கவே கூடாது. குறிப்பாக ஆசிரியர்களின் சொல்லைக் கேட்டு நடந்தால் நாம் நன்றாக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு இடம் கொடுக்கவே கூடாது. நாம் நினைத்ததையே செய்ய வேண்டும். அப்போதுதான் வேகமாக சிறைச்சாலைக்குச் செல்ல முடியும். உங்கள் எதிர்காலம் சிறக்க வீதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் சொல்கேட்டு நடக்க வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபட வேண்டும். வாழ்நாளில் ஒரு புத்தகமும் வாசிக்க கூடாது, பாடசாலை பக்கம் போகவே கூடாது. அம்மா, அப்பா, பெரியோர்களை மதிக்கவே கூடாது. இவ்வாறான தீய எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் கல்வியில் பின்னடைவைப் பெற முடியும். நீங்கள் வாசிக்காமல் படிக்காமல் விட்டால் அரசாங்கத்திற்கு மிக இலாபம் ஏனென்றால் ஒரு பாடசாலை மூடப்பட்டால் 5 சிறைச்சாலைகள் திறக்கப்படும். அதற்கு மாணவர்களாகிய நாம் அயராது பாடுபட வேண்டும்.
இன்றைய காலம் நவீனமயமான காலம் இதில் நவீன சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். நமது குற்றச் செபல்களும் நவீனமயப்பட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால் புத்தகம் படிப்பவன் புத்திசாலியாக அதவதற்கான வாய்ப்பு இருக்கும். அதை நாங்கள் ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது. இதை வாசிக்கின்ற பொழுது நீங்கள் போசிக்கக்கூடும். ஆனால் இதைக் கூட உங்களுக்கு வாசிக்க நேரம் இருக்கிறதா தெரியவில்லை. இதை வாசித்தப் பின் யோசி நான் என்ன நிலையில் இருக்கின்றேன் என்பது தெரியவரும்.
மாத்தாமலே யோசி
கல்வியால் விண்ணை தொட்டவர்கள் பற்றி கூறுகிறேன். இதையும் நீங்கள் வாசிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்…..
- உலகத்தை மாற்றக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் கல்வி என்றார் நெல்சன் மண்டேலா.
- படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருக்கலாம் என்றார் பிளேட்டோ.
- அறியாமை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான் ஆனால் அறியாமலே இருப்பது தான் வெட்கப்பட வேண்டிய விடயம் என்றார் பென்சமின் பிராங்களின்
- பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்றக் கல்வி கைவிடாது என்றார் மகாத்மா காந்தி.
- மனிதன் தன்னுடைய கல்வியின் மூலமாகத்தான் அறிவை மேம்படுத்துவது தனது கடமையாக இருக்க வேண்டும் என்றார் விவேகானந்தர்.
- முதுமையை முன்னிட்டு எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் தன்னை மேம்படுத்துவதற்கு தன் பாதுகாப்புகளிலே மிக சிறந்தது கல்வி என்றார் அரிஸ்டோட்டில்.
- ஒரு நாட்டுக்கு செலவில்லாத பாதுகாப்பு செய்வது கல்வி என்றார் எட்மேன் வொர்சு, ஏன் அப்படிச் சொன்னார் என்றால் கத்திகளால் பெற்ற வெற்றிகளை விட புத்திகளால் பெற்ற வெற்றிகள் அதிகம் என்பதால்.
- படிப்பின் அருமை தெரிந்ததால் தான் நஞ்சுக்கொடுக்கும் நேரம் வரை கிரேக்க நாட்டு கவிதைகளை படித்துக் கொண்டு இருந்தான் சாக்ரமஸ்.
- தூக்கு மேடைக்கு அழைக்கும் வரை படித்தவன் பகத்சிங்.
- படிக்கின்ற இடத்திற்குப் பக்கத்தில் படுக்கை அறையைக் கேட்டார் அறிஞர் அம்பேத்கர்.
- படித்த புத்தகத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக தனது அறுவை சிகிச்சையை அடுத்த நாளில் வைக்கச் சொன்னார் பேரறிஞர் அண்ணா.
- பயணத்தின் போதெல்லாம் படித்தவர் பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
- படிக்கின்ற புத்தகத்தை முடிக்காமல் படுக்கக் கூடாது என்பதற்காக நித்திரையை மறந்தவர் முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணன்.
- படிப்பால் மட்டுமே பாரதத்தை பாராள வைக்க முடியும் என்று படித்துப் படித்துச் சொன்னார் அப்துல் கலாம்.
- இரவுத் தொழுகையை விட ஒரு மணி நேரம் கற்றுக் கொடுப்பதே மேலானது என்றார் நபிகள் நாயகம்.
- அலெக்சாண்டர் இந்த உலகத்தை வென்றதற்குக் காரணம் என்னவென்று கேட்க அவர் சொன்னாராம் தனது ஆசிரியர் அரிஸ்டோட்டில் என்று.
இவ்வாறு கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறிஞர்கள் பலர் கூறித் தம்மை உலகறிய செய்வதற்கு அயராது பாடுபட்டார்கள். இதை நான் இங்கு கூறுகிறேன் நீங்களும் இதைப்போல் ஆகிவிட மாட்டீர்களா என்று.