மேலைநாட்டில் வேலை செய்து வந்த இளைஞர் வருண், அந்நாட்டு வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டையும் நன்கு அறிந்தவர். அவர் பணியாற்றிய அலுவலகத்திலும் நல்ல நட்பு வட்டாரத்தை உருவாக்கியிருந்தார். வெளிப்படையாக எல்லாம் நன்றாக இருந்தாலும், உள்ளத்தின் ஆழத்தில் அவர் ஒரு தனிமையைச் சுமந்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் வழக்கம்போல் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு சிறிய பிழை காரணமாக மேலாளர் அவரை தனது அறைக்குள் அழைத்து கடுமையாக கண்டித்தார். அந்தச் சம்பவம் வருணின் மனதை பெரிதும் பாதித்தது. அலுவலகத்தில் இருந்த சக ஊழியர்கள் யாராவது கேட்டாலும், தனது மனவேதனையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் அமைதியாகவே இருந்தார். வெளிநாட்டில் இருந்தாலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உரிமை அவருக்கு இருந்தது; ஆனால் அதை புரிந்துகொள்ளும் மனங்கள் அருகில் இல்லாததே அவரது வேதனையாக இருந்தது.
அந்த நாள் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பியபோது, தனிமை அவரை மேலும் வாட்டியது. “என் மனக்கவலைகளை கேட்க யாரும் இல்லையா?” என்ற கேள்வி அவரது உள்ளத்தில் எழுந்தது. காரணம் ஒன்றே அவர் தனது உணர்ச்சிகளை தாய்மொழியான தமிழில் பகிர்ந்தால் மட்டுமே அந்த வலி குறையும் என்ற நம்பிக்கை. அந்நிய நாட்டில் புன்னகையே அந்நியமாக மாறியிருந்த அந்த சூழலில், தாய்மொழி அவருக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.
இரவு ஒன்பது மணியளவில் அவரது வீட்டுக் கதவை யாரோ தட்டினர். கதவைத் திறந்த வருண், எதிர் வீட்டுக்காரரை பார்த்தார். அவர் சிரித்தபடி, “நீங்கள் சாப்பிட்டீர்களா?” என்று தமிழில் கேட்டார். அந்த ஒரு கேள்வி வருணின் உள்ளத்தை உருகச் செய்தது. நொடிப்பொழுதும் யோசிக்காமல், அவர் அந்த அயலவரை அணைத்துக் கொண்டு கண்கலங்கினார்.
பின்னர் இருவரும் சேர்ந்து அமர்ந்து உணவருந்தியபோது, வருண் தனது அலுவலக அனுபவங்களையும் மனவேதனைகளையும் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார். அந்த இரவு, ஒரு அயலவர் நண்பனாக மாறிய தருணமாக அமைந்தது. அந்த உறவை உருவாக்கியது ஒரு மொழி தாய்மொழி. ஒரு சொல் ஒரு உறவாக மாறும்; ஒரு மொழி ஒரு வாழ்வை மாற்றும்.
அந்நிய தேசத்தில் ஆதரவாக நின்றது தாய்மொழிதான்.
உண்மையில், வலியின் மொழி—தாய்மொழியே.