நீ போகலையா?

என் மனதில் ஆசைகள் பல இருந்தாலும், அவற்றில் பாதியாவது என் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்தபடியே இருக்கிறேன். இதற்குக் காரணம் என் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையே. பல இடங்களுக்கு சென்று உலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வறுமையில் வாழ்பவர்களுக்கு அது எட்டாத கனவாகவே தோன்றும். “பணம்” என்ற ஒன்றே பல ஆசைகளுக்கும் கதவைத் திறக்கும் திறவுகோல் என்பதை அப்போது நன்றாக உணர்ந்திருந்தேன்.

“நாளை நான் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தில் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்” என்ற எண்ணம் என்னுள் வலுவாக இருந்தது. அதற்குக் காரணம், என் பெற்றோரிடம் கூடுதல் செலவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்ற என் மனப்பாங்கு. தோழிகளுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், என் அப்பாவின் உழைப்பையும் கஷ்டத்தையும் நினைத்தாலே அவரிடம் பணம் கேட்கத் தயக்கமாக இருந்தது.

ஒருநாள் என் தோழிகள் சுற்றுலா செல்லும் விஷயத்தை என் தம்பியிடம் சாதாரணமாகப் பகிர்ந்தேன். அப்போது அவன் கேட்ட ஒரு எளிய கேள்வி “நீ போகலையா?” என் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனுடன் சேர்ந்து, நான் படித்த ஒரு புத்தகத்தில் வந்த ஒரு வரியும் என் சிந்தனையை மாற்றியது: “பணத்தை எப்போதும் சம்பாதிக்கலாம்; ஆனால் இனிய நினைவுகளை சம்பாதிக்க முடியுமா?” அந்தச் சொற்கள் என் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.

அந்த நிமிடத்தில் நான் உணர்ந்தேன் பணம் பின்னரும் சம்பாதிக்கலாம்; ஆனால் இன்றைய தருணங்கள் மீண்டும் வராது. நண்பர்களுடன் பகிரும் அனுபவங்கள் வாழ்க்கையின் அழகான நினைவுகளாக மாறுகின்றன. உடனே என் தந்தையிடம் சென்று சுற்றுலாவிற்கான அனுமதியை கேட்டேன். அவர் சம்மதித்தபோதும், அந்தப் பணத்தை வாங்கிக் கொள்வதில் என் மனம் சிறிது சுமையடைந்தது.

அந்தச் சுமையே என்னுள் ஒரு புதிய எண்ணத்தை உருவாக்கியது. நான் செலவழிக்கும் பணத்தையும், என் கல்விக்கான செலவுகளையும் நான் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உதித்தது. அதன்படி, கல்லூரி முடிந்து மாலை நேரங்களில் அக்கம் பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு பாடம் நடத்தத் தொடங்கினேன். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு குறைந்த தொகையை நிர்ணயித்து, அதன்மூலம் சிறிய அளவில் வருமானம் ஈட்டத் தொடங்கினேன்.

அந்தச் சிறிய முயற்சியே என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் சம்பாதித்த பணத்தால் என் கல்வித் தேவைகளையும், என் சிறிய ஆசைகளையும் நிறைவேற்ற முடிந்தது. என் பெற்றோருக்கும் என்னைப் பற்றிய ஒரு பெருமை உணர்வு உருவானது. இன்று, அந்தச் சிறிய முயற்சி வளர்ந்து, பல மாணவர்கள் பயிலும் ஒரு தனித்துவமான முயற்சியாக மாறியுள்ளது. அது ஒரு துணைத் தொழிலாக மட்டுமின்றி, என் தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் உருவெடுத்துள்ளது.

எனவே, வாழ்க்கையில் உள்ள ஆசைகளை அடக்கி வைக்காமல், அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிகளைத் தேட வேண்டும். அதற்கான பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் என் ஆசையை நிறைவேற்றியதைப் போல, நீங்களும் உங்கள் கனவுகளை தடைசெய்யாமல், சிந்தித்து செயல்பட்டு அவற்றை நனவாக்குங்கள். அப்போது வாழ்க்கை வளமாகவும் மகிழ்ச்சியாகவும் மலரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *